சந்திரசேகர் ராவின் கட்சி பா.ஜ.க.வின் 'பி' டீம்: ராகுல் காந்தி
- சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
- பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.
கம்மம் :
தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கம்மம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவையும் கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது, 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர் ராவ், தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக்கொள்கிறார்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால் சந்திரசேகர் ராவின் கட்சி, பா.ஜனதாவின் பி டீமாகத்தான் உள்ளது.
சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன்.
காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.
இது தெலுங்கானாவிலும் நடைபெறும். மாநிலத்தின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.