இந்தியா

நாசிக்கில் இரு அக்னிவீரர்கள் பலி: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

Published On 2024-10-13 20:19 GMT   |   Update On 2024-10-13 20:19 GMT
  • இந்தச் சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
  • இதற்கு பா.ஜ.க. அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது என்றார் ராகுல் காந்தி.

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில், கடந்த 10-ம் தேதி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் கோஹில் விஸ்வராஜ், சயீபாத் ஆகிய 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணமடைந்தனர்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நாசிக்கில் பயிற்சியின்போது கோஹில் விஸ்வராஜ் சிங் மற்றும் சைபத் ஷிட் ஆகிய இரு அக்னிவீரர்கள் மரணம் அடைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பாஜக அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கான இழப்பீட்டிற்கு இணையாக கோஹில் மற்றும் சைபத் குடும்பத்தினருக்கு சரியான நேரத்தில் இழப்பீடு வழங்கப்படுமா?

அக்னிவீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற அரசு வசதிகள் ஏன் கிடைக்காது? இரு வீரர்களின் பொறுப்பும் தியாகமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அவர்கள் தியாகம் செய்த பிறகு ஏன் இந்தப் பாகுபாடு?

அக்னிபாத் திட்டம் ராணுவத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் நமது வீரர், வீராங்கனைகளின் தியாகத்தை அவமதிக்கும் செயல்.

ஒரு ராணுவ வீரரின் உயிரை விட மற்றொரு ராணுவ வீரரின் உயிர் ஏன் விலை உயர்ந்தது என்பதற்கு பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும்.

இந்த அநீதிக்கு எதிராக ஒன்றுபடுவோம். பாஜக அரசின் அக்னிவீர் திட்டத்தை நீக்கி, நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்றே நமது ஜெய் ஜவான் இயக்கத்தில் இணையுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News