இந்தியா

வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா? - மோடிக்கு நவீன் பட்நாயக் கேள்வி

Published On 2024-05-12 07:32 GMT   |   Update On 2024-05-12 07:32 GMT
  • தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
  • அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது.

ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார்.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்

இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும் காகித குறிப்பு ஏதுமின்றி சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால் விடுத்தார்.

நினைவுத்திறன் தொடர்பாக சவால் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக தனது எக்ஸ் தள பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களே, "தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?" "ஜூன் 10ம் தேதி எதுவும் நடக்காது. அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது. ஜகந்நாதரின் ஆசியுடனும், ஒடிசா மக்களின் அன்புடனும் பிஜேடி ஆட்சி அமைக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News