கேரளாவுக்கு 2 கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட அழுகிய மீன்கள்- போலீசார் கைப்பற்றி விசாரணை
- கண்டெய்னரில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
- அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த மீன்கள் ஐஸ்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த மரடு பகுதியில் சாலையோரம் 2 கண்டெய்னர்கள் நின்று கொண்டிருந்தன.
அந்த கண்டெய்னரில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர்.
அதில் ஏராளமான மீன்கள் இருந்தன. அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த மீன்கள் ஐஸ்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன.
கண்டெய்னரின் டிரைவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அந்த கண்டெய்னர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கேரளா வந்திருக்கலாம் என தெரிகிறது.
கேரள சந்தையில் மீன்களை விற்க கொண்டு வந்திருக்கலாம் எனவும், பொதுமக்கள் வந்ததால், கண்டெய்னரை நிறுத்திவிட்டு டிரைவர் தலைமறைவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் கண்டெய்னரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த சுகாதார துறையினர் கண்டெய்னரில் இருந்த மீன்களை கைப்பற்றி அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, மீன்களை பரிசோதித்த பின்னர், அவற்றை மொத்தமாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.