சம்பல் மசூதி கலவரம் உ.பி. அரசின் 'திட்டமிட்ட சதி'.. சகோதரத்துவத்தை பாஜக அழிக்கும் - அகிலேஷ்
- போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
- டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய தடை விதித்த நீதிமன்றம் மசூதி ஆய்வை தள்ளிப்போட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி இந்து அமைப்பு தொடர்ந்து வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டரை தூக்கிக்கொண்டு கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.
அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய தடை விதித்த நீதிமன்றம் மசூதி ஆய்வை தள்ளிப்போட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட்டத்தில் காட்டமான உபி மற்றும் மத்திய பாஜக அரசுகள் மீது காட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தில் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் ஓம் பிர்லாவை நோக்கி பேசிய அவர், "இது மிகவும் தீவிரமான விஷயம். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பலில் நடந்த வன்முறை திட்டமிடப்பட்ட சதி வேலை, நீண்ட காலமாக சகோதரத்துவத்தின் அடையாளமாக விளங்கும் இடத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அரங்கேறிய சதி. நாடு முழுவதும் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நடத்தும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நாட்டின் சகோதரத்துவத்தை அழித்துவிடும். என்று தெரிவித்தார்.
முன்னதாக சம்பல் அரசு அதிகாரிகள் பாஜக தொண்டர்களை போல் நடந்து கொள்கின்றனர். சம்பல் சம்பவம் மற்ற பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப பாஜகவின் நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. எல்லா இடங்களிலும் தோண்ட விரும்புபவர்களால் - ஒரு நாள் நாட்டின் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்தார். அகிலேஷ் பேச்சுக்கு அவையில் இருந்த எம்.பி.க்கள் இருக்கையில் இருந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.