ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
- மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாகப் பிரித்தது.
- காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.
16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.