இந்தியா

5-வது தொடர் வெற்றிக்கு அடித்தளமிட்ட அசத்தல் திட்டம்

Published On 2023-12-03 09:26 GMT   |   Update On 2023-12-03 09:26 GMT
  • பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கடந்து பெரும் வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது
  • அனைத்து பிரிவை சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற முடியும்

மத்திய பிரதேச சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களிக்க தகுதியுள்ள மக்களில் சுமார் 77 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியது.

இதில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையான 116க்கும் மேலாக 160 இடங்களை கடந்து பா.ஜ.க. மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மீண்டும் 5-வது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சாதனை.

ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதாகவும் அதன் பயன் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவை அனைத்தையும் பொய்யாக்கி விட்டது.

ம.பி.யில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிகளவில் பெண்கள் வாக்களித்ததாகவும் அதற்கு காரணம் "லாட்லி பெஹ்னா யோஜனா" (ladli behna yojana) எனும் திட்டம்தான் என சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

"லாட்லி பெஹ்னா யோஜனா" திட்டம் என்றால் என்ன?

ம.பி.யில் 2023 மார்ச் 5 அன்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்மணிகள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் மாநில அரசாங்கத்தினால் ரூ.1000 வரவு வைக்கப்படும். இதன் நோக்கம். பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் தங்கள் குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்த பால், கனி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுவதுதான். இத்திட்டத்திற்கு அடுத்த சில வருடங்களில் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிட போவதாக ம.பி. அரசு கூறியது.

யார் யார் இதில் சேரலாம்?

ம.பி.யில் நிரந்தரமாக வசிக்கும் பெண்மணிகள் மட்டுமே இதற்கு பயனாளியாக தகுதி பெறுவார்கள். இதற்கான மனுவளிக்கும் போது அப்பெண் 21 வயதிற்கு குறையாமலும் 60 வயதை கடக்காமலும் இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும், பயனாளிகள் வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது. குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சேர்வதற்கு சாதி, மத, இன பேதங்கள் இல்லை. பொதுப்பிரிவினர், பின் தங்கிய வகுப்பினர், பட்டியலின பிரிவினர் உட்பட அனைவரும் இதில் இணைய தடையில்லை. திருமணமானவர்கள், கணவரை பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் மற்றும் விதவைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

மனுதாரர் தர வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?

ஆதார் அட்டை

மனுதாரரின் புகைப்படம்

வங்கி கணக்கு விவரம்

செல்போன் எண்

வசிப்பிட முகவரிக்கான ஆதாரம்

பிறப்பு சான்றிதழ்

இத்திட்டத்திற்கான உதவி தொகை மேலும் உயர்த்தப்படலாம் என தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் தொடர்ந்து அறிவித்துள்ளதால், அக்கட்சியின் வெற்றியில் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News