கலவரம் எதிரொலி - அரியானாவின் குருகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- அரியானாவின் குருகிராமில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 40 பேர் காயமடைந்தனர்.
- இதையடுத்து, குருகிராமில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
அரியானா மாநிலம் குர்கிராம் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.
அப்போது குர்காம்-அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்தபோது, ஒரு அமைப்பினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது. இதில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.
தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். அத்துடன் துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரம் எதிரொலியாக, அரியானாவின் குருகிராமில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.