மாடுகளால் இருபிரிவினர் இடையே மோதல்.. 144 தடை உத்தரவால் பரபரப்பு
- வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டனர்.
- பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.
இஸ்லாமியர்கள் சார்பில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தின் மெடாக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக இரு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே இடத்தில் நான்கிற்கும் அதிகமானோர் ஒன்றுகூட அனுமதி இல்லை. இதன் மூலம் பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.
மோதல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக இரு பிரிவினரை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து, அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
"மோதல் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்," என்று மெடாக் பகுதிக்கான காவல் துறை கண்காணிப்பாளர் பி பால சுவாமி தெரிவித்துள்ளார்.