சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார் - பாஜக தலைவர் நாராயண் ரானே
- சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
- மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது.
குஜராத்தின் சூரத் நகரை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண் ரானே பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயண் ரானே, "நான் ஒரு வரலாற்றாசிரியர் கிடையாது. ஆனால் வரலாற்றாசிரியர் பாபாசாகேப் புரந்தாரே எழுதியதை படித்துள்ளேன். சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார்" என்று தெரிவித்தார்.
சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை, காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்த நிலையில், இன்று நாராயண் ரானே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து இந்த விவாதங்கள் உருவாகியுள்ளன.
ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில், "சிவாஜி சூரத் நகரை கொள்ளையடித்தார்" என்று எழுதியுள்ளார்.
வரலாற்றுப் புத்தகங்களில் 1664 மற்றும் 1670 ஆகிய ஆண்டுகளில் 2 முறை சூரத்தை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.