சிபிஐ விசாரணை அனுமதியை திரும்பப்பெற மந்திரி சபை முடிவு: கருத்து தெரிவிக்க மறுத்த டி.கே. சிவகுமார்
- 2017-ல் டிகே சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
- அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார். கர்நாடகாவில் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி நடைபெற்றபோது, டி.கே. சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வரிமான வரிச்சோதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இதனடிப்படையில் டி.கே. சிவக்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கர்நாடக அரசிடம் அனுமதி கேட்டது. அப்போதைய பா.ஜனதா அரசு அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து டி.கே. சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது டி.கே. சிவக்குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரிசபை கூட்டத்தில், டி.கே. சிவகுமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி வெளியானது.
இந்த நிலையில் மந்திரிசபை முடிவு குறித்து டி.கே. சிவகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டி.கே. சிவகுமார் பதில் அளிக்கையில் "நான் செய்தித்தாளில்தான் இந்த தகவலை படித்து தெரிந்து கொண்டேன். மந்திசபை கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. யார் பேச வேண்டுமோ, அவர்கள் பேசுவார்கள்.
நான் இரண்டு நாட்கள் தெலுங்கானாவில் பிரசாரம் செய்கிறேன். கட்சி கேட்டுக்கொண்டால் அதை நீட்டித்துக் கொள்வேன்" என்றார்.