இந்தியா

பர்பதிபரூவா, சாமிமுர்மு

null

மத்திய அரசின் பத்ம விருதுக்கு தேர்வு: சாதித்து காட்டிய சாமானியர்கள்...

Published On 2024-01-26 10:50 GMT   |   Update On 2024-01-26 10:52 GMT
  • பர்பதி குடும்பத்தில் 40 யானைகள் வளர்த்துள்ளார்கள்.
  • மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்காக தனியாக ஒரு அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

ஆண்டுதோறும் மத்திய அரசின் பத்ம விருது பெறுபவர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் பிரமிக்கத்தக்க செயல்களை நாடு முழுவதும் ஆங்காங்கே செய்து கொண்டிருப்பவர்களை தேடி கண்டுபிடித்து விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இவர்கள் நிஜ ஹீரோக்கள்.

அவர்களில் யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் பெண் யானை பாகன் என்ற பெருமைக்குரிய பர்பதிபரூவாவும் ஒருவர்.

67 வயதாகும் பர்பதி அசாமின் அரச குடும்பத்தில் பிறந்தவர். அந்த காலத்தில் யானைகள் வளர்ப்பது பணக்கார குடும்பங்களில் அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது.

அந்த வகையில் பர்பதி குடும்பத்தில் 40 யானைகள் வளர்த்துள்ளார்கள். நம்மில் பலர் யானையை கட்டி தீனி போட்ட கதை என்று யானை வளர்ப்பின் சிரமத்தை பற்றி பேசுவதுண்டு.

ஆனால் நாம் மாடு வளர்ப்பது போல் பர்பதியின் குடும்பத்தில் யானைகளை வளர்த்து இருக்கிறார்கள். வீட்டை சுற்றி சுற்றி வந்த யானைகளுடன் தனது 14 வயது முதல் பழக தொடங்கிய பர்பதி ஒரு கட்டத்தில் யானைகளின் செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார்.

அதன் பிறகு யானைகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பல நடவடிக் கைகளை எடுத்துள்ளார். 1975-களில் 14 காட்டு யானைகளை கட்டுப்படுத்தி அடக்கினார். தொடர்ந்து அந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், உணவுகள் வழங்கவும் வன அதிகாரிகளுக்கு உதவி செய்தார்.

2000-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறைக்கு உதவி செய்தார். யானைகள் நலனுக்காக அவர் எடுத்து வந்த முயற்சியை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையில் சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அசாம் அரசு கவுரவ தலைமை யானை வார்டன் என்று அவரை பாராட்டியது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் நலனில் அவர் காட்டி வரும் அக்கறையால் இப்போது மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது.

சத்ய நாராயண பெலரி, ஜாகேஸ்வர யாதவ்

காட்டு வாசிகளை நாட்டு வாசியாக்க தன்னையே அர்ப்பணித்தவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜாகேஷ்வர் யாதவ். சிறு வயதிலேயே காடுகளில் வாழும் மலைவாழ் மக்களை பார்த்து அவர்களை முன்னேற்றுவதில் ஈடுபட்டார்.

அதற்காக அந்த காட்டுவாசிகளுடன் சென்று வசித்து அவர்கள் பேசும் மொழியை கற்க தொடங்கினார். அந்த மொழி தெரிந்த பிறகு அவர்களுடன் சகஜமாக பேசி பழகி அவர்களுக்காக பாடுபட தொடங்கினார்.

அடர்ந்த காட்டு பகுதியில் வசிக்கும் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது, சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற பணிகளை செய்ய தொடங்கினார்.

முதலில் அவர்களுக்கு செருப்புகள், அரைக்கால் சட்டைகள் வாங்கி கொடுத்து அணிய வைத்தார். அவரது கடின முயற்சியால் 2021-ம் ஆண்டு முதல் முதலாக பெண் குழந்தை ஒன்று பள்ளிஇறுதி தேர்வை எழுதி வெற்றி பெற்றார். ஜாகேஷ்வர் யாதவ் சுகாதார திட்டங்களை தீவிரமாக அமல்படுத்தியதால் மலைவாழ் மக்களிடையே சிசு மரணம் தடுக்கப்பட்டது.

ராய்ப்பூர் தொகுதி எம்.பி.யாகவும் ஒரு முறை வென்றார்.

மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்காக தனியாக ஒரு அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சாவான் மாவட்டம் பக்ரைசாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமி முர்மு. 57 வயதாகும் முர்மு கடந்த 24 ஆண்டுகளில் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

மாவோயிஸ்டுகளால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களுக்கு பதிலாக இதை நட்டு பராமரித்து வருகிறார். இவரது அமைப்பில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்.

40 கிராமங்களில் 30 ஆயிரம் பெண்களை திரட்டி சுய உதவி குழுக்களை தொடங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

அரியானா மாநிலம் சிர்சா கிராமத்தை சேர்ந்தவர் குர்விந்தர்சிங் (53). இவருக்கு நேர்ந்த விபத்து இவரது வாழ்க்கை பாதையை மாற்றியது.

நடக்க இயலாமல் போனதால் மற்றவர்களின் நலனுக்காக உழைக்க தொடங்கினார். தனது சமூக சேவையால் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இது தவிர ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 300 குழந்தைகளை பராமரிக்கிறார். இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் வழங்கி வருகிறார். இதன்மூலம் விபத்துகளில் சிக்கிய 6 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சத்யநாராயண பெலேரி. நெல் விவசாயியான இவர் தென்னிந்தியாவில் 650 பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வருகிறார்.

ஆராய்ச்சி மையங்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவசமாக நெல் விதைகளை வழங்கி நெல் ரகங்களை பாதுகாக்கிறார்.

செல்லம்மா

அந்தமானை சேர்ந்த செல்லம்மா (69). 6-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இயற்கை விவசாயம் செய்யும் இவர் தென்னை மற்றும் பனை மரங்களை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளார்.

Tags:    

Similar News