கர்நாடக ஆளுநருடன் சித்தராமையா சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
- கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்க உள்ளார்.
- துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்கிறார் என காங்கிரஸ் தெரிவித்தது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதற்கிடையே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பினர். அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
தனக்கு ஆதரவளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அப்போது டி.கே.சிவகுமார் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.