"அழைப்பு இல்லை... வருத்தமும் இல்லை": கபில் தேவ் கருத்து
- அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது
- 1983ல் மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு கபில் தேவ் தேடி தந்தார்
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கியது.
இப்போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தொடர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.
இறுதிப்போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதை காண, இதுவரை நடைபெற்ற அனைத்து ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற அணிகளின் அப்போதைய கேப்டன்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அழைப்பு விடுத்தது.
ஆனால், இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் முதல்முதலாக உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில் தேவின் பெயர் இந்த அழைப்பிதழ் பட்டியலில் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி கபில் தேவ், இன்று நரேந்திர மோடி மைதானத்திற்கே வரவில்லை.
இது குறித்து முன்னாள் கேப்டன் தெரிவித்ததாவது:
நான் அழைக்கப்படவில்லை என்பது உண்மைதான். என்னை அழைக்கவில்லை. அதனால் நானும் செல்லவில்லை; அவ்வளவுதான். 1983ல் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுடன் அங்கு இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். எனக்கு வருத்தமில்லை. இது மிக பெரிய நிகழ்ச்சி. பல பொறுப்புகளில் முக்கியமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் எங்களை போன்றவர்களை அழைக்க மறந்து விடுகிறார்கள். சில நேரங்களில் மக்களுக்கு மறதி ஏற்படுவது சகஜம்தான்.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.
40 வருடங்களுக்கு முன்பு, கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னர்களாக மேற்கிந்திய கிரிக்கெட் அணி இருந்து வந்தது. 1983 உலக கோப்பை போட்டியில் அவர்களை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தோற்கடித்தது.
இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்புதான் கிரிக்கெட் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்க தொடங்கியது. அதற்கு பிறகு இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் வர தொடங்கியது. பல இந்திய முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு கபில் தேவ்தான் கனவு நாயகன்.
மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்து, இந்திய இளைஞர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்ள காரணமாயிருந்த கபில் தேவிற்கே தற்போதைய இறுதி போட்டியில் அழைப்பு இல்லை எனும் செய்தியை கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.