இந்தியா

ராமர் பால வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்

Published On 2023-02-17 02:21 GMT   |   Update On 2023-02-17 02:21 GMT
  • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
  • மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர்.

புதுடெல்லி :

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 19-ந்தேதி விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர். மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி முறையிட்டார்.

''இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரசியல்சட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் நிறைவடைந்த பிறகு இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News