தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான புதிய சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார்.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. புதிய சட்டத்தின்படி தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரின் பரிந்துரைக்கப்பட்ட மத்திய மந்திரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை தவிர்த்து அவருக்கு பதிலாக மத்திய மந்திரி குழுவில் இடம்பெற்றார்.
தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி தவிர்க்கப்பட்ட இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இந்த புதிய சட்டத்தின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.