இந்தியா

10 திருநங்கைகளின் பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சுரேஷ்கோபி

Published On 2024-05-28 07:52 GMT   |   Update On 2024-05-28 07:52 GMT
  • திருச்சூர் தொகுதி மக்கள் தனக்கு வெற்றியை தருவார்கள் என்று அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
  • ஆவணங்களை திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் ஒப்படைத்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ்கோபி. இவர் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். திருச்சூர் தொகுதி மக்கள் தனக்கு வெற்றியை தருவார்கள் என்று அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார். அதற்காக அவர் ரூ.12லட்சத்தை டெபாசிட் செய்து, அதற்கான ஆவணங்களை திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் ஒப்படைத்தார்.

நிதியுதவி பெற்ற திருநங்கைகள் கூறும்போது, 'நடிகரின் இந்த ஆதரவு வெறும் கருணை மட்டும் அல்ல. சமூகத்தின் தேவை மற்றும் பொறுப்பாகும். நாங்கள் சமூகத்தில் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ்வதற்கான ஒவ்வொரு தனிநபர் உரிமையின் தொடக்கமாகும்' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

திருநங்கைகளுக்கு நிதியுதவி அளித்தது பற்றி நடிகர் சுரேஷ்கோபி கூறும்போது, 'பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு ஒதுக்கப்படும் நிதியுதவியை அரசு தாமதப்படுத்தினால், மேலும் 10 பேரின் அறுவை சிகிச்சைக்கு நிதியளிக்க தயாராக இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News