டங்ஸ்டன் சுரங்கம்: தமிழ்நாட்டின் வரலாற்றை அழிக்கும் முயற்சி-வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு
- பாராளுமன்றத்தின் மக்களவையில் வெங்கடேசன் எம்.பி. இன்று உரையாற்றினார்.
- அப்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி பாராளுமன்றத்தின் மக்களவையில் வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது:
ஒன்றிய அரசு மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதித்திருக்கிறது. அந்த அனுமதியை, ஏல உத்தரவை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை நிலம் அரிட்டாபட்டி நிலம். இங்கே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால படுக்கை இருக்கிறது.
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டு இருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணச் சிற்பம் இருக்கிறது.
1,200 ஆண்டுகளுக்கு முந்தைய முற்காலப் பாண்டியர்கள் கட்டிய சிவன் குடைவரைக் கோவில் இருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலப் பாண்டியர்கள் அமைத்த ஏரி இருக்கிறது.
வரலாறு முழுக்கத் தனது மேனியில் வரலாற்றுச் சின்னங்களை ஏந்தியிருக்கிற அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்.
அரிட்டாபட்டி கல்வெட்டில் இமையன் என்கிற சொல் இருக்கிறது. இமையம் எப்படி இந்தியாவைக் காக்கிறதோ, அதேபோல இமையன் என்ற சொல் இருக்கிற அரிட்டாபட்டி நிலத்தை நாங்கள் காத்து நிற்போம் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழடியிலே பத்து அடி குழி தோண்ட தொல்லியல் துறைக்கு அனுமதி கொடுக்காத ஒன்றிய அரசு, இன்றைக்கு தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் பல நூறு கிலோமீட்டர் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழ்நாட்டினுடைய வளத்தையும், வரலாற்றையும் ஒருசேர அழிக்கிற இந்த முயற்சியை தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பார்கள். மதுரை மக்கள் எதிர்ப்பார்கள். அங்கே இருக்கிற அனைத்து கிராமங்களிலும் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.