இந்தியா
null

விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்

Published On 2023-09-05 03:19 GMT   |   Update On 2023-09-05 05:08 GMT
  • வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
  • வழக்கு விசாரணை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பெங்களூரு:

சிறையில் சொகுசு வசதி பெறுவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து 2 பேருக்கும் பிரவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணை வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 3 பேரும் சிறைவாசம் முடிந்து விடுதலையாகி விட்டனர். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி அடைக்கப்பட்டு இருந்த போது அங்கு சொகுசு வசதி களை பெறுவதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய சிறை துறை டி.ஐ.ஜியாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறை அதிகாரிகளான கிருஷ்ணகுமார், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை விதானசவுதா அருகே உள்ள லோக் ஆயுக்தா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி நீதிபதி லட்சுமி நாராயணபட் உத்தரவிட்டு இருந்தாா்.

அதன்படி அன்று சசிகலா, இளவரசி, சிறை அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் நேரில் ஆஜரானார்கள். சிறை சூப்பிரண்டுகளான டாக்டர் அனிதாவும், கிருஷ்ணகுமாரும் தங்கள் மீதான விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை வாங்கி இருந்ததால் ஆஜராகாமல் இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி லட்சுமி நாராயண பட் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 16-ந்தேதி சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கான விளக்கம் அடங்கிய மனுவை நீதிபதியிடம் வழங்கினார்கள்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து லோக் ஆயுக்தா கோர்ட்டில் நடைபெற்று பெற்று வருகிறது. ஆனால் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகமால் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் சசிகலா மற்றும் இளவரசி தரப்பில் யாரும் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் ஜாமீனில் வெளியே வராதபடி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகா லோக் ஆயுக்தா கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ள நிலையில் சசிகலா, இளவரசி 2 பேரையும் கைது செய்ய கர்நாடக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News