மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்- ப.சிதம்பரம் கருத்து
- மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை.
- பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை.
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை. கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற ஜி.எஸ்.டி விகிதங்களில் எந்தக் குறைப்பும் இல்லை. பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை. மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத பல கூடுதல் கட்டணம் மற்றும் செஸ்களில் எந்தக் குறைப்பும் இல்லை' என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், 'இந்த பட்ஜெட்டால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஏழைகளுக்கு அல்ல. வேலை தேடும் இளைஞர்கள், வேலை இழந்தவர்கள், பெரும்பகுதி வரி செலுத்துவோர், இல்லத்தரசிகள் ஆகியோருக்கும் அல்ல. மொத்தத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கானது அல்ல' என தெரிவித்தார்.