மனைவியின் உடலை தொட்டு பரிசோதித்த டாக்டரை தாக்கிய கணவருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
- மருத்துவ கல்லூரி டாக்டரை தாக்கிய பிவி ஜாம்ஷெட்-டை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர்.
- மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய நபருக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிவி ஜாம்ஷெட்.
பிவி ஜாம்ஷெட்டின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது பிவி ஜாம்ஷெட்டின் மனைவியின் உடலை தொட்டு பரிசோதனை மேற்கொண்டார்.
மனைவியின் உடலை டாக்டர் தொட்டு, தொட்டு பரிசோதித்ததை பிவி ஜாம்ஷெட் கண்டித்தார். அதற்கு டாக்டர், இது வழக்கமான நடைமுறை என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பிவி ஜாம்ஷெட், மனைவியை தொட்டு பரிசோதித்த டாக்டரை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த டாக்டர், இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் பிவி ஜாம்ஷெட் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மருத்துவ கல்லூரி டாக்டரை தாக்கிய பிவி ஜாம்ஷெட்-டை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இதனை அறிந்த பிவி ஜாம்ஷெட் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார்.
இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய நபருக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை பரிசோதனை செய்யும் டாக்டர்கள், அவர்களின் உடலை தொட்டு பரிசோதிப்பது வழக்கமான நடைமுறை. அதனை கண்டித்து, டாக்டர்களை தாக்குவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிவிஜாம்ஷெட் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவித்தது.