சமூக வலைதளத்தில் மலர்ந்த காதல்: பாகிஸ்தான் இளம்பெண்ணை ஆன்லைனில் கரம்பிடித்த இந்திய வாலிபர்
- பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
- மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் முகமது அர்பாஸ். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த இளம்பெண் அமீனாவும் சமூக வலைதளம் மூலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது.
பாகிஸ்தான் சென்று திருமணம் செய்தால் அது இந்தியாவில் செல்லாது என்பதால் இந்தியாவில் இருந்தபடியே அமீனாவை மணமுடிக்க அர்பாஸ் திட்டமிட்டார்.
அதன்படி காணொலி வாயிலாக முஸ்லிம் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் மணமகன் அர்பாசும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மணமகள் அமீனாவும் அமர்ந்திருக்க இரு வீட்டாரின் ஆசியோடு திருமணம் நடத்தப்பட்டது.
மணமகன் அர்பாசின் தந்தை முகமது அப்சல் கூறும்போது, "எங்களது உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அந்த உறவு இன்றளவும் நீடிக்கிறது. மணமகள் விசாவிற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அது தாமதமானது. எனவே, ஆன்லைன் முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். அண்டை நாடுகளுக்கு இடையே இதுபோன்ற திருமணங்கள் புதிதல்ல.
கடந்த காலங்களில் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் திருமணங்கள் நடைபெற்று உள்ளன. கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காலத்திலும், 2 நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாக இருந்தபோதிலும் இதுபோன்ற திருமணங்கள் நடந்தன. நாங்கள் முறைப்படி விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்று எங்கள் மருமகளை இந்தியாவுக்கு அழைத்து வருவோம்" என்றார்.
மணமகன் அர்பாஸ் கூறுகையில், "பாகிஸ்தானில் திருமணம் செய்தால் இந்தியாவில் செல்லாது. இப்போது இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைனில் திருமணம் செய்திருப்பதால் எங்களது திருமணம் செல்லும்" என்றார். ஆன்லைனில் சட்டப்பூர்வமாக திருமணம் நடைபெற்றிருப்பதால் இந்திய, பாகிஸ்தான் தரப்பில் எளிதில் விசா கிடைக்கும் என்று அர்பாஸ்-அமீனாவின் உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜோத்பூரைச் சேர்ந்த முசம்மில் கான், பாகிஸ்தானைச் சேர்ந்த உருஜ் பாத்திமாவை ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் சீமா ஹைதர் , ரபுபுரா பகுதியில் வசிக்கும் தனது இந்திய காதலன் சச்சின் மீனாவுடன் வசிக்க கடந்த மே 13-ந் தேதி நேபாளம் வழியாக தனது 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தார். இதையடுத்து சீமா கைது செய்யப்பட்டார். சச்சின் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர்கள் இருவரும் ஜூலை 7-ந் தேதி உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று ரபுபுராவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில், பாகிஸ்தானின் பழங்குடியினரான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லா (24) என்பவரை 34 வயதான திருமணமான இந்தியப் பெண்ணான அஞ்சு, பாகிஸ்தானுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 2 நாடுகளைச் சேர்ந்த மற்றொரு ஜோடி எந்தவித சலசலப்பும் இன்றி இருவரது குடும்பத்தினரின் ஆசியோடு ஆன்லைனில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.