10 மாநிலங்களில் விரைவில் கவர்னர்களை மாற்ற முடிவு
- காஷ்மீருக்கு புதிய கவர்னரை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
- கேரளாவில் தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு மத்திய அரசு வேறு புதிய பணியை ஒதுக்க தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கிறார்கள்.
இதனால் பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் கவர்னராக இருக்கும் அனந்தி பென் படேல் பதவி காலம் 5 ஆண்டுகள் முடிந்துள்ளது. அதுபோல கேரளாவில் கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் பதவி காலமும் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
அதுபோல யூனியன் பிரதேசங்களான காஷ்மீர், அந்தமான், டாமன் டையூ, தாதர் ஆகியவற்றிலும் கவர்னர்களின் பதவி காலம் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. தமிழ்நாடு, கோவா, கர்நாடகா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளனர்.
10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருப்பதால் அவர்களை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. பெரும்பாலான கவர்னர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் 3 ஆண்டுகளை கடந்துள்ள கவர்னர்களின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு திருப்தி அளித்துள்ளன. அவர்களை தற்போதைய மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே கவர்னர்கள் மாற்றத்தின் போது தமிழக கவர்னர் ரவியும் இடம்மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துள்ளது. உமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சிக்கு முழு ஆதரவு கொடுக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன் படி காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில் காஷ்மீருக்கு புதிய கவர்னரை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கு கவர்னராக இருக்கும் மனோஜ் சின்கா 4 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கிறார்.
மனோஜ் சின்காவுக்கு பதில் புதிய கவர்னராக பா.ஜ.க. முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவை கவர்னராக நியமனம் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.
சில மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர். இதனால் அவருக்கு கவர்னர் பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கேரளாவில் தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு மத்திய அரசு வேறு புதிய பணியை ஒதுக்க தீர்மானித்துள்ளது. அவருக்கு பதில் அந்தமான் தீவு கவர்னர் தேவேந்திர குமார் கேரளாவின் புதிய கவர்னராக மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதுபோல கர்நாடகா கவர்னர் கெலாட், குஜராத் கவர்னர் ஆச்சாரியா தேவ்ரத், கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் படேல், உத்தரகாண்ட் கவர்னர் குர்மித்சிங் ஆகியோரும் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
புதிய கவர்னர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பிறகு கவர்னர்கள் மாற்றம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
கவர்னர்கள் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்க தொடங்கி இருப்பதால் பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கவர்னர் பதவியை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. முன்னாள் எம்.பி.க்கள் அஸ்வினி துபே, வி.கே.சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரது பெயர்கள் புதிய கவர்னர்கள் பதவிக்கு அடிபடுகிறது.