இந்தியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு

Published On 2022-08-19 03:56 GMT   |   Update On 2022-08-19 06:57 GMT
  • மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ சோதனை.
  • அதனால்தான் நம் நாடு இன்னும் நம்பர் 1-ஆக இல்லை என்று டெல்லி துணை முதல்வர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கை விதிகளில் மாற்றம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு தனியாருக்கு சாதகமாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மதுபான கொள்கையில் மாற்றம் செய்ததால் ஆம் ஆத்மி அரசுக்கு மிகப்பெரிய அளவில் முறைகேடாக பணம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து மதுபான கொள்கை விதிகள் திருத்தத்தை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்றது. என்றாலும், மதுபான விதிகள் திருத்தத்தில் உடந்தையாக இருந்த 6 அதிகாரிகளை அதிரடியாக நீக்கம் செய்து டெல்லி கவர்னர் நடவடிக்கை எடுத்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் அவர் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி மதுபான கொள்கை விதிகள் திருத்தம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக 6 மாநிலங்களில் 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியில் துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் அவரது அமைச்சக அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனைகளுக்கு துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா டுவிட்டரில் பதிவிட்டார். அதில் அவர், 'சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். 'எதுவும் வெளியில் வரப்போவதில்லை' என்று கூறியிருந்தார்.

இதே கருத்தை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'சி.பி.ஐ. ரெய்டு சிறப்பாக செயல்பட்டதற்கான வெகுமதி' என்று வெளியிட்டிருந்தார்.

Tags:    

Similar News