ஆந்திராவில் சிறுவன் உடலை 40 கி.மீ. பைக்கில் எடுத்து சென்ற தந்தை
- சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.
- 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி சென்று விட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அமரபுரம் மண்டலம் அனுமந்துனி பல்லே என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா. விவசாயி. இவருடைய மகன் ருஷி கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக லிங்கப்பா 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். ஆம்புலன்ஸ் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதக சிறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.
ஆனால் 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்கள் சென்று விட்டனர்.
இதனால் லிங்கப்பா அவரது உறவினர் ஒருவரை வரவழைத்தார். பின்னர் சிறுவன் உடலை 40 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதகசிறை மற்றும் அமரபுரம் மண்டல வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.