சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை- போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு
- பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார்.
- குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஞாறக்கல் வெளியதம்பரம்பு பகுதியை சேர்ந்தவர் பிஜூ பிரான்சிஸ் (வயது 41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
அந்த பெண்ணின் வீட்டிற்கு பிரான்சிஸ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமி மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை அவர் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
இதற்கு இந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிஜூ பிரான்சிசை கைது செய்தனர்.
அவர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ 5.50 லட்சம் அபராதமும் விதித்தார்.
சிறைதண்டனையை பிஜூ பிரான்சிஸ் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்றும், அபராத தொகையை சிறுமிக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட சட்டபணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது கருத்தில், இது போன்ற சம்பவம் மிகவும் கொடூரமானது. அதனால் தான் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் சமீபத்திய போக்சோ வழக்குகளில், தற்போது வழங்கப்பட்ட தண்டனையே அதிகபட்ச தண்டனை என்று கூறப்படுகிறது.