இந்தியா

12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- கடற்கரைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2024-06-20 05:35 GMT   |   Update On 2024-06-20 05:35 GMT
  • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் வருகிற 23-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

மேலும் கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரத்தையும் தெரிவித்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த 2 தினங்களாக கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கு மேலும் சில மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வருகிற 23-ந்தேதி கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று முதல் நாளை மறுநாள்(22-ந்தேதி) வரை கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடல்சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதையும், கடலில் இறங்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News