இந்தியா

கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த விநோத வழக்கு... 8 பேரை மணந்து மோசடி செய்ததாக மனைவி மீது கணவர் குற்றச்சாட்டு

Published On 2024-09-12 09:11 GMT   |   Update On 2024-09-12 09:11 GMT
  • மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
  • பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், முதல் கணவர் இறந்ததால் பெண் மறுமணம் செய்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயை சேர்ந்தவர் ராஜா உசேன். திருமணமான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் ராஜா உசேன் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜா உசேன், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது மனைவிக்கு ஏற்கனவே 8 முறை திருமணமாகி உள்ளதாக கூறி அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். மேலும் ஏற்கனவே 8 பேரை திருமணம் செய்து என்னை மோசடி செய்ததுடன், தன் மீது பொய்யான வரதட்சணை புகார் கொடுத்துள்ளதாகவும், அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், முதல் கணவர் இறந்ததால் பெண் மறுமணம் செய்துள்ளார். அவர் 8 திருமணங்கள் செய்யவில்லை. 4 பேரை மட்டுமே திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜா உசேன், தனது மனைவி 8 பேரை திருமணம் செய்ததாக பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார். இதனால் பெண்ணுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே ராஜா உசேன் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா உசேன் தரப்பு வக்கீல், அந்த பெண் 8 பேரை திருமணம் செய்ததற்கான சாட்சிகள் எங்களிடம் உள்ளது. இதுவரை 5 போ் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். இன்னும் 3 பேர் மட்டும் ஆஜராக வேண்டி உள்ளது. அவர்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண் தரப்பில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை முன் வைக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ராஜா உசேன் தரப்பில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கூறினார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News