தண்ணீர் தொட்டியில் விழுந்த நபரை காக்கத் தவறிய மனித(ம்)ன்
- குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை.
- தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஷேக் அக்மல் என்ற இளைஞர் (22 வயது) வசித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக ஜிம்முக்கு சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு மீண்டும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
அப்போது குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார் ஷேக் அக்மல். இதனை குடியிருப்பில் இருந்த நபர் பார்த்தும், பார்க்காதது போல் இருந்தது மட்டுமல்லாமல் ஷேக் அக்மலை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. மனிதத் தவறால் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் என்ற போதும், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நபரை காப்பாற்றாமல் தண்ணீர் தொட்டியை மூடிச்சென்ற அந்த நபரின் செயல் மனிதநேயம் குறித்து பல்வேறு கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது.
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஷேக் அக்மல் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இளைஞரை காப்பாற்றாமல், தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.