50 வழக்குகளை முடித்து வைத்தால்.. கூடுதலாக 100 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன- கிரண் ரிஜிஜூ
- இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இடையே ஒப்பிட வேண்டிய அவசியமில்லை.
- ஆயுதப்படை தீர்ப்பாயத்திற்கு எந்த உதவியையும் வழங்க சட்ட அமைச்சகம் தயார்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியுள்ள நிலையில், ஒரு நீதிபதி 50 வழக்குகளை முடித்து வைத்து தீர்ப்பளித்தால், 100 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் செயல்பாடு குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் ரிஜிஜு, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது என்றார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.83 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறினார். கீழ் நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 72,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இடையே ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாடுகளுக்கு இடையே வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன என்று ரிஜிஜு கருத்து தெரிவித்தார்.
5 கோடி மக்கள் தொகை கூட இல்லாத சில நாடுகள் இருக்கும் நிலையில் இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.
நீதியை விரைவாக வழங்குவதற்கு ஆயுதப்படை தீர்ப்பாயத்திற்கு எந்த உதவியையும் வழங்க சட்ட அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.