ஓட்டுக்கு பணம் தருவதாக அறிவிப்பு- மத்தியபிரதேச மந்திரி மீது வழக்கு: தேர்தல் கமிஷன் நடவடிக்கை
- அதிக பட்ச வாக்குகளை பெறும் வாக்குசாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
- மத்தியபிரதேச பா.ஜனதா மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபால்:
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய பிரதேச போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறை மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு ஆதரவாக அதிக பட்ச வாக்குகளை பெறும் வாக்குசாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இது தொடர்பாக மத்திய பிரதேச மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் மீது காங்கிரஸ் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. விசாரணையில் அவர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்தியபிரதேச பா.ஜனதா மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.