நிசார் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படுகிறது- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
- இஸ்ரோ விண்கல பஸ், எஸ்-பேண்ட் ரேடார் மற்றும் ஏவுதல் சேவைகளுக்கு பங்களிக்கிறது.
- பனிப்பாறை இயக்கம் மற்றும் பூகம்பம் போன்ற பல்வேறு பூமி செயல்முறைகளை ஆராய்ச்சி செய்ய இந்த திட்டம் உதவும்.
அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ) இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் பணியை 'நிசார்' என அழைக்கின்றன. அதிநவீன ரேடார் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளவில் நிலப்பரப்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதே இந்த பணியின் நோக்கமாகும்.
பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், மேற்பரப்புகள் மற்றும் பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து, உயிரி, இயற்கை பேரழிவுகள், கடல் மட்ட உயர்வு, நிலத்தடி நீர் மற்றும் பலவற்றின் தரவுகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
குறிப்பாக, பூமியின் நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை மேலும், கீழுமாக சென்று ஆய்வு செய்கிறது. தொடர்ந்து அதனுடைய பணிக்காலமான 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 6 நாட்களுக்கு ஒரு முறை தரவுகளை நிசார் செயற்கைக்கோள் சேகரிக்க உள்ளது.
நிசார் என்பது ஒரு புதுமையான செயற்கைக்கோள் பணியாகும். பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாகக் கண்காணிக்க, எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் ஆகிய இரண்டு ரேடார் அலைவரிசைகள் பயன்படுத்தப்பட உள்ளது. நாசா எல்-பேண்ட் ரேடார் மற்றும் பிற தொழில்நுட்பங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் இஸ்ரோ விண்கல பஸ், எஸ்-பேண்ட் ரேடார் மற்றும் ஏவுதல் சேவைகளுக்கு பங்களிக்கிறது.
பனிப்பாறை இயக்கம் மற்றும் பூகம்பம் போன்ற பல்வேறு பூமி செயல்முறைகளை ஆராய்ச்சி செய்ய இந்த திட்டம் உதவும். அத்துடன், இவற்றின் இயக்கங்கள் சென்டிமீட்டர் அளவுக்கு சிறியதாக இருந்தாலும் அற்றையும் இந்த பணி மூலம் அடையாளம் காண முடியும். செயற்கை துளை ரேடார் தொழில்நுட்பத்துடன், நிசார் செயற்கைகோள், பகல் அல்லது இரவு மற்றும் எந்த வானிலையிலும் கிடைக்கும் விரிவான படங்களை உருவாக்க முடியும்.
அத்துடன், 150 மைல்களுக்கு மேல் பரந்த இமேஜிங் வரம்பில் 12 நாட்களில் முழு பூமியின் படங்களையும் கைப்பற்றும் திறன் நிசார் செயற்கைக்கோளுக்கு உள்ளது.
பணியில் இருந்து வரும் ரேடார் படங்கள் பயிர் வயல்களில் ஏற்படும் மாற்றங்கள், ஆபத்தான மண்டலங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற தற்போதைய இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க உதவும். காலப்போக்கில் இந்த சிக்கலான படங்களை ஆய்வு செய்வதன் மூலம், நில மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவை சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன? என்பதைப் பற்றிய ஆழமான நுண்ணறிவை ஆராய்ச்சியாளர்கள் பெற முடியும். நிசார் செயற்கைக்கோள் 2025-ம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி- மார்க்2 ராக்கெட் மூலம் பூமி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
பூமி அறிவியலுக்கான நாசாவின் திறந்த தரவுக் கொள்கையைப் பின்பற்றி, அலாஸ்கா சாட்டிலைட் வசதி மூலம் அனைத்து நிசார் செயற்கைக்கோள் தரவையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற முடியும். நாசா மற்றும் இஸ்ரோ முக்கியமான தரவுகளை சேகரிக்க பல வருட அறிவியல் பணிகளுக்கு தயாராகி வருகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.