இந்தியா

கேரளாவில் 204 மி.மீட்டருக்கு மேல் மழை கொட்டும்- 3 மாவட்டங்களுக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை

Published On 2024-06-22 04:52 GMT   |   Update On 2024-06-22 04:52 GMT
  • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(23-ந்தேதி) மக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை வருகிற 25-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(23-ந்தேதி) மக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த 3 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. அந்த குழுக்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க முகாம்களை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி அனைத்து துறை அதிகாரிகளும், மீட்பு படை குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News