சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்த வழக்கு- சிறை முன்னாள் ஊழியர்கள் 3 பேர் மீதான வழக்கு அனுமதி ரத்து
- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.
பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்து 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோருக்கு தனி சமையலறை, சொகுசு படுக்கைகள், பார்வையாளர்கள் சந்திக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
அப்போது மத்திய சிறைப் பாதுகாப்புப் பணியில் இருந்த கர்நாடக மாநிலத் தொழில் பாதுகாப்புப் படையில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கஜராஜா, மத்திய சிறை உதவிக் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் தலைமைக் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்குத் தொடர கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.