ரூ.10 கோடியில் தாய்க்கு கோவில் கட்டிய மகன்- அன்னையர் தினத்தில் திறந்து வழிபாடு
- பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.
- கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடல வலசையை சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். இவரது மனைவி அனுசுயா தேவி. மகன் சரவணகுமார். இவர் ஐதராபாத்தில் தொழில் செய்து வருகிறார்.
அனுசுயா தேவி தனது மகனை பாசத்துடன் வளர்த்தார். மேலும் தனது மகன் படிக்க கடுமையாக உழைத்தார். சரவணகுமாருக்கு தாய் அனுசுயா தேவி மீது அளவு கடந்த பாசம் உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு அனுசுயாதேவி உடல்நல குறைவு காரணமாக இறந்தார். தாய் இறந்தது முதல் சோகத்தில் ஆழ்ந்த சரவணகுமார் தன் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்தார்.
கட்டிட கலை நிபுணர் பாலகம் சஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாண்டிதுரை, ஒடிசாவை சேர்ந்த கைவினைக் கலைஞர் சுரேஷ் ஆகியோருடன் தாய்க்கு ரூ.10 கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டினார்.
பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன. கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
அம்மாவின் அன்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவிலில் படங்களுடன் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
அன்னையர் தினமான நேற்று கோவில் கருவறையில் தனது தாயின் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர் கோவிலுக்கு சென்றனர்.
தாய்க்கு ரூ.10 கோடியில் கோவில் கட்டிய சரவணக்குமாரை பாராட்டி சென்றனர்.