தேர்தலில் இந்த முறை வெற்றிபெறுவேன்- சுரேஷ்கோபி
- திருச்சூர் மக்கள் என் தலையில் கிரீடத்தை வைப்பார்கள்.
- நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை.
திருவனந்தபுரம்:
மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்ற நிலை நிலவிவருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.
கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
திருச்சூர் தொகுதி வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அவர், தனது தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். நேற்று முன்தினம் திருச்சூர் சென்ற அவருக்கு, பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நடிகர் சுரேஷ் கோபி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் தாக்கமும், செல்வாக்கும் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இங்கு இருக்கிறேன். சினிமா நடிகனாக அல்ல. அரசியல் சேவகனாக. நான் தற்போது மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவனாக இருக்கிறேன்.
தேர்தலில் முதலில் 2019-ம் ஆண்டு போட்டியிட்டேன். அதன்பிறகு 2021-ல் போட்டியிட்டேன். ஆனால் இந்த முறை வெற்றிபெற வந்திருக்கிறேன். திருச்சூர் மக்கள் என் தலையில் கிரீடத்தை வைப்பார்கள். இந்த முறை எனக்கு திருச்சூரை தருவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை. அது எனது வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு சுரேஷ்கோபி கூறினார்.