டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி
- வருகிற 26-ந்தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
- 2022-ல் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
புதுடெல்லி :
குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் (தற்போது கடமையின் பாதை) மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு (2022) இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.
மேலும், மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், "குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எந்த எந்த மாநிலங்கள் சார்பில், என்ன என்ன அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும்? என்பதை அந்த குழுவே முடிவு செய்யும்" என கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை முன்னிலைப்படுத்திய இந்த ஊர்தி தமிழகத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள ராஜபாதை சீரமைக்கப்பட்டு 'கடமையின் பாதை' ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பையும், வீரர்களின் சாகசங்களையும் பார்க்கிறார்.
இந்த நிகழ்வில் இந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்க உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா கால வழிகாட்டல்களை பின்பற்றியும், அணிவகுப்புக்கான பல்வேறு விதிமுறைகளை பின்பற்றியும் ஊர்திகளை வடிவமைக்குமாறு இந்த மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஊர்திகள் வடிவமைக்கும் பணிகள் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெறும். பணிகள் முடிந்ததும் அலங்கார ஊர்திகளுக்கான குழு அவற்றை பார்வையிட்டு அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.