ஆந்திரா - தேர்தல் அறிக்கையில் மோடி படம் நஹி : பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு
- ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு வருகிற 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், நேற்று விழாவில் கலந்து கொண்ட, ஆந்திர மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்து விட்டதும் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.