இந்தியா

இன்று உலக தண்ணீர் தினம்- நாடு முழுவதும் 97 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை

Published On 2023-03-22 05:23 GMT   |   Update On 2023-03-22 05:23 GMT
  • நாடு தழுவிய அளவில் 305 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
  • மக்களுக்கு கிடைக்கும் குடிநீர் தரமானதாக உள்ளதா? எப்படி இருக்கிறது? என்று ஆய்வில் கேள்விகள் கேட்கப்பட்டன.

புதுடெல்லி:

உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு தண்ணீரே பிரதானமாகும். தண்ணீர் மூலம்தான் பெரும்பாலான நோய்கள் பரவுகிறது.

இதனால் சுகாதார துறையினரும், டாக்டர்களும் வீடுகளில் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல, சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? என்று சமீபத்தில் ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியது.

நாடு தழுவிய அளவில் 305 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மக்களுக்கு கிடைக்கும் குடிநீர் தரமானதாக உள்ளதா? எப்படி இருக்கிறது? என்று கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கிடைத்த பதில்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் நாடு முழுவதும் 97 சதவீத குடும்பங்களுக்கு இதுவரை பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என தெரியவந்தது.

குழாய்கள் மூலம் நேரிடையாக கிடைக்கும் குடிநீரை அவர்களே சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குடிநீரை பொதுமக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் ஆர்ஓ அமைப்பு மூலம் சுத்தம் செய்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர். 28 சதவீதம் பேர் சுத்திகரிப்பு கருவிகள் மூலம் குடிநீரை சுத்தம் செய்து கொள்வதாக கூறினர்.

11 சதவீதம் பேர் மட்டுமே குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரின் தரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வை காட்டிலும் இந்த ஆண்டு தரமான தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிகரித்து உள்ளது.

14 சதவீதம் பேர் மோசமான தண்ணீரே கிடைப்பதாக தெரிவித்து உள்ளனர். 32 சதவீதம் பேர் பரவாயில்லை என தெரிவித்து உள்ளனர். இதற்கு உள்ளாட்சிகளின் செயல்பாடும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.

நல்ல நீரின் தரம் குடிப்பதற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து. இதில் தண்ணீரை வடிகட்ட இப்போதும் பலர் களிமண் பாத்திரங்களை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

நகர்புறங்களில் பலரும் கேன்களில் விற்கப்படும் மினரல் வாட்டரை வாங்கி குடிக்கிறார்கள். ஆனால் இதிலும் சுகாதார கேடு இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News