இந்தியா

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

Published On 2023-10-31 03:52 GMT   |   Update On 2023-10-31 05:12 GMT
  • தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.
  • மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார்.

அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் உடனுக்குடன் கவர்னர் கையெழுத்து போடுவதில்லை. ஒவ்வொரு கோப்பு மீதும் பல்வேறு விளக்கங்களைப் பெற்று அதில் திருப்தி அடைந்தால்தான் கவர்னர் கையெழுத்து போடுகிறார். மற்ற கோப்புகளை நிலுவையில் வைத்து அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்.

அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்று சொல்லி இருந்தார்.

தற்போது 25 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெழுத்திடாமல் உள்ளார்.

ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய பிறகுதான் வேறுவழியின்றி அந்த மசோதாவில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதேபோல், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் கவர்னரின் கை யெழுத்துக்காக நிலுவையில் உள்ளது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவையும் நிலுவையில் உள்ளது.

இந்த சட்ட மசோதா உள்பட 25 சட்ட மசோதாக்களுக்கு அதிகமான கோப்புகள் மீது கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு போதிய விளக்கம் அளித்தும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன்மீது முடிவெடுத்து கையெழுத்திடாமல் கவர்னர் உள்ளதால் தமிழக அரசு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட் டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின்கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். கவர்னர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசு இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

இந்த வழக்கு அனேகமாக சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News