பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை.. ஆட்டோவிலேயே குழந்தையை பெற்றெடுத்த கர்பிணி
- போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
- . நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது.
ராஜஸ்தானை சேர்ந்த போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆட்டோ ரிக்க்ஷாவில் நீமுச் மாவட்ட மருத்துவமனைக்கு தனது மனைவியை தினேஷ் அழைத்துச்சென்றார்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து, உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் தினேஷ் செய்வதறியாது தவித்த நிலையில் ரஜினிக்கு ஆட்டோ ரிக்க்ஷாவிலேயே குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறக்கும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை துணியால் மறைத்து உதவினர். தொடர்ந்து, தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர். முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மயக்க மருந்து நிபுணர் விடுமுறையில் இருப்பதால், சிசேரியன் பிரசவம் செய்ய சாத்தியமில்லை என்பதாலேயே கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.