இந்தியா

பாராளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம்

Published On 2023-07-25 00:35 GMT   |   Update On 2023-07-25 04:42 GMT
  • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று காலை போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்நிலையில் மேல்சபையில் இருந்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாறிமாறி பங்கேற்றனர்.

குறிப்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங் எம்.பி. இரவு முழுவதும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விடிய விடிய எம்.பி.க்களின் தர்ணா நடந்தது.

எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் கையில் 'மணிப்பூருக்காக இந்தியா' ('INDIA for Manipur') என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். நள்ளிரவு வரை எம்.பி.க்கள் உட்கார்ந்து இருந்தனர். அதன்பிறகு அங்கேயே புல்தரையில் படுத்து தூங்கினார்கள்.

இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டம் காலையில் தொடங்கியது. சுழற்சி முறையில் எம்.பி.க்கள் வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 20 பேர் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

இதைப்போல மீண்டும் ஒரு போராட்டத்தை அவர்கள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News