இந்தியா

குழந்தைகள் படிப்பதற்காக வீட்டை தானமாக வழங்கிய பெண்

Published On 2024-07-16 05:45 GMT   |   Update On 2024-07-16 05:45 GMT
  • மகனுடன் குடிசையில் குடியேறி வசித்து வருகிறார்.
  • குழந்தைகள் படிப்பை தொடர வேண்டியது அவசியம்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் குனோ பாய். பழங்குடியின பெண்ணான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தார். இதையடுத்து பண்ணைகள் மற்றும் வீடுகளுக்கு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

தனது மகனுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துவந்த குனோ பாய்க்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் (அனைவருக்கும் வீடு திட்டம்) மூலம் வீடு கிடைத்தது. அந்த வீட்டில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டின் அருகே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

மிகவும் பழைய பாழடைந்த கட்டிடத்தில் இயங்கிவந்த அந்த பள்ளியில் தான், அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படித்துவந்தனர்.

அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்த நிலையில் மிகவும் சேதமடைந்து இருந்தது. இதனைப்பார்த்த குனோ பாய் வேதனை அடைந்தார்.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் கிடைத்த புதிய வீட்டின் தான் வசித்துவரும் நிலையில், சிறிய குழந்தைகள் பாழடைந்த கட்டிடத்தில் படித்து வருவதை நினைத்து வேதனைப்பட்டார்.

ஆகவே தனது வீட்டை பள்ளி நடத்துவதற்கு கொடுக்க முன்வந்தார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குனோ பாய் தனது மகனுடன் வீட்டை காலி செய்து ஓலைக்குடிசையில் குடியேறினார்.

பின்பு தனது வீட்டை பள்ளி நடத்துவதற்கு வழங்கினார். அதன்பிறகு அவரது வீட்டில் பள்ளி நடந்து வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

பள்ளி நடந்துவரும் தனது வீட்டை கடந்து செல்லும் போதேல்லாம், குனோ பாய் அங்கு சிறிதுநேரம் நின்று குழந்தைகள் பாடம் படிக்கும் சத்தத்தை கேட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் தன்னுடைய குடிசைக்கு செல்கிறார்.

பள்ளி குழந்தைகளுக்காக தங்கியிருந்த தனது வீட்டை கொடுத்து விட்டு, குடிசைக்கு மாறியது குறித்து குனோ பாய் கூறியிருப்பதாவது:-

கிராமத்து குழந்தைகள் பாழடைந்த கட்டிடத்தில் படிக்கிறார்கள் என்பதை அறிந்து என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. குழந்தைகள் படிப்பை தொடர வேண்டியது அவசியம். சரியான கூரை மற்றும் சுவர்கள் இல்லாத தால் நான் அவர்களுக்கு எனது வீட்டை கொடுத்தேன். நான் குடிசையில் வாழ்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறி னார்.

குனோபாய் வீட்டில் செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியை குந்திபாய் ஜகத் கூறும்போது, 'குனோ பாய் அவரது வீட்டை எங்களுக்கு இலவசமாக கொடுத்தார். அங்கு குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம்.

எங்கள் பள்ளியில் மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு ஒரே அறையில் கற்பிப்பது கடினம். ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்து வருகிறோம்' என்றார்.

Tags:    

Similar News