"ரீமால்" புயலின் கோரத்தாண்டவம் : மரங்கள் வேரோடு சாய்ந்தன- லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவிப்பு
- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரையோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
- மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.
அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
ரீமால் புயல் கோரத்தாண்டவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரையோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
வங்காளத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்தது. புயல் காரணமாக அங்கு குறைந்தது 3 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழை எதிரொலியால் வீடுகள் மற்றும் பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கின.
முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் புயல் கரையோரப் பகுதிகளைத் தாக்கியதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பலத்த காற்று மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேற்கு வங்காள மின்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸின் கூற்றுப்படி, "புயல் எதிரொலியால் ஏற்பட்ட நிலச்சரிவில் முதல் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 356 மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. பல மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன" என்றார்.
சூறாவளி வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் ஓலை வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.