இந்தியா

ஜார்கண்ட் சட்டமன்றத்தில் இன்று பலத்தை நிரூபிக்கிறார் சம்பாய் சோரன்

Published On 2024-02-05 02:13 GMT   |   Update On 2024-02-05 02:13 GMT
  • ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
  • குதிரை பேரம் நடக்காமல் இருக்க ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கான அழைத்துச் செல்லப்பட்டனர்.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி ஜார்கண்ட் சட்டமன்றத்தில் சம்பாய் சோரன் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். பா.ஜனதா குதிரை பேரம் பேசிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இன்று காலை அவர்கள் ஜார்கண்ட் அழைத்து வரப்பட்டனர். அழைத்து வரப்பட்ட அவர்கள் நேராக சட்டமன்றம் சென்று வாக்கெடுப்பில் பங்கேற்க வைக்கப்படுவார்கள்.

81 இடங்களை கொண்ட ஜார்கண்டில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. ஜார்கண்ட் மோர்ச்சா கூட்டணிக்கு 47 இடங்கள் உள்ளது. இதில் 43 எம்.எல்.ஏ.க்கள் சம்பாய் சோரனுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க உள்ளனர்.

ஜார்கண்டில் பா.ஜனதாவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் அமைப்பிற்கு 3 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.

Tags:    

Similar News