ஒடிசா ரெயில் விபத்து - பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
- கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசாவின் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
- இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புவனேஷ்வர்:
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு செல்ல உள்ளேன். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.