உத்தரபிரதேசத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த பாலம் இடிந்தது
- கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாலத்தை அரசு மூடியது.
- பாலத்தின் 2, 10, 17 மற்றும் 22-வது தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கான்பூர்-உன்னாவ் இடையே கங்கை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1874-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.
சுக்லகஞ்ச் சுற்றுவட்டார மக்கள் கங்கை ஆற்றை கடந்து செல்வதற்கு இந்த பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த பாலத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் அந்த பாலத்தை ஆய்வு செய்து, அது போக்குவரத்துக்கு பயனற்றது என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாலத்தை அரசு மூடியது. அதன் வழியாக போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
150 ஆண்டு பழமை வாய்ந்த அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுபற்றி உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில், பாலத்தின் 2, 10, 17 மற்றும் 22-வது தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெறாததாலும், சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதாலும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.
இடிந்து விழுந்த பாலத்தை உள்ளூர் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். பலர் அதனை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
பாலம் இடிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.