இந்தியாவில் 34 லட்சம் பேர் உயிரைக் காத்த தடுப்பூசி: ஆய்வில் தகவல்
- கொரோனா தொற்று மேலாண்மையில் இது வலுவான பதிலளிப்பாக அமைந்தது.
- கொரோனாவை கட்டுப்படுத்தி, பொருளாதார செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.
புதுடெல்லி :
சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று, உலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியது. இந்த தொற்றின் ஆரம்ப காலத்திலேயே இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன.
இந்தத் தடுப்பூசியால் நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது, உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் 34 லட்சம் பேரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்தகவல் தெரிவிக்கிறது.
'பொருளாதாரத்தை சீர்ப்படுத்துதல்: இந்தியாவின் தடுப்பூசி மற்றும் தொடர்புடைய சிக்கல்களில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மதிப்பிடுதல்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்த ஆய்வு கட்டுரையை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவத்தினால் 2020-ம் ஆண்டு, ஜனவரி மாதம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொற்று மேலாண்மை தொடர்பான செயல்முறைகள், கட்டமைப்புகள் இந்தியாவில் செயல்படத்தொடங்கி விட்டன.
பிரதமர் மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அரசு, ஒட்டுமொத்த மக்கள்சமூகம் என்ற அணுகுமுறை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. கொரோனா தொற்று மேலாண்மையில் இது வலுவான பதிலளிப்பாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-
* கொரோனா தொற்றைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், தினசரி பாதிப்பின் அளவு 7,500 என்ற அளவில் (2020 ஏப்ரல் 11 நிலவரம்) இருந்தது.
* மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊரடங்கு போட்டிருக்காவிட்டால், கொரோனா தினசரி பாதிப்பின் அளவு அப்போது 2 லட்சம் என்ற அளவுக்கு சென்றிருக்கும்.
* ஊரடங்கால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,500 என்ற அளவிலேயே இருந்தது.
* இந்தியாவில் கட்டுப்படுத்துதல், நிவாரணங்கள், தடுப்பூசி நிர்வாகம் ஆகிய 3 அம்சங்களால் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவை கட்டுப்படுத்தி, பொருளாதார செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது. தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி வலுப்படுத்தப்பட்டது.
* இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் தடுப்பூசி திட்டம், செயல்படுத்தப்பட்டதால் 34 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.