மழை வேண்டி சிறுவர்களுக்கு திருமணம் செய்து நூதன வழிபாடு
- கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை.
- கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி வருண பகவானுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. பருவமழைகளும் சரிவர பெய்யாததால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து ஏற்கனவே கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி வருண பகவானுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மண்டியா மாவட்டம் கிக்கேரி அருகே குட்டேஒசஹள்ளி கிராமத்தில் மழை வேண்டி 'சந்திரன் திருமணம்' என்ற நூதன வழிபாட்டை கிராம மக்கள் நடத்தினர்.
அதன்படி 2 சிறுவர்களை தேர்வு செய்து, அதில் தர்ஷன் என்ற சிறுவனை சூர்யதேவன் வேடத்திலும், லோகேசை சந்திரமதியாகவும் வேடமிட்டு அலங்கரித்தனர். பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மைதா மாவை வாங்கி வந்தனர்.
அதன்பிறகு அந்த மாவை கொண்டு அப்பம், ரொட்டி தயாரித்து திறந்தவெளியில் சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி நூதன வழிபாடு நடத்தினர். பின்னர் மழை வேண்டி ஆடிப்பாடி அப்பம், ரொட்டியை மக்கள் போட்டி போட்டு எடுத்து சாப்பிட்டனர். இதன்மூலம் வருண பகவான் மழை பொழிய வைப்பார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.