செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் கலந்துரையாடலை பகிர்ந்த ரஷிய பெண்
- இறுதியில் செருப்பு தைப்பதற்காக ரூ.10 மட்டுமே வாங்கிய விகாசை அவர் பாராட்டியதோடு அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இணைய பக்கத்தில் மரியா பகிர்ந்தார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் விகாசின் ஆங்கில புலமையையும், அவரது திறமையையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.
ரஷியாவை சேர்ந்தவர் மரியா சுகுரோவா. இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். மும்பையில் பல்வேறு இடங்களுக்கும் சென்ற அவர், அங்குள்ள ஒரு தெருவில் நடந்து சென்ற போது அவரது செருப்பு அறுந்துவிட்டது. இதனால் வெறும் காலுடன் நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் சிறிது தூரத்தில் சாலையோரம் இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்கு சென்றார். அங்கு விகாஸ் என்ற தொழிலாளி செருப்பு தைத்து கொண்டிருந்தார்.
அவரிடம் மரியா சுகுரோவா தனது செருப்பை கொடுத்து தைத்து தரும்படி கூறுகிறார். உடனே விகாஸ், மரியாவின் செருப்பை தைக்க தொடங்குகிறார். அப்போது விகாசுடன் மரியா கலந்துரையாடும் போது விகாஸ், தான் 26 வருடங்களாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறியதோடு தனது தொழில் தொடர்பாக அவருடன் கலந்துரையாடினார். அப்போது விகாசின் ஆங்கில பேச்சு திறமையை பாராட்டிய மரியா, விகாசின் தொழில் நேர்மையையும் பார்த்து வியந்தார்.
இறுதியில் செருப்பு தைப்பதற்காக ரூ.10 மட்டுமே வாங்கிய விகாசை அவர் பாராட்டியதோடு அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இணைய பக்கத்தில் மரியா பகிர்ந்தார். அவரது இந்த வீடியோ 6.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் விகாசின் ஆங்கில புலமையையும், அவரது திறமையையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.